மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சப்- இன்ஸ்பெக்டர்
மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சப்- இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் டருன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக முஜக்கீர் என்பவர் ரம்ஜான் இரவு தொழுகையை முடித்து விட்டு தன்னுடைய 4 வயது மகன் முபஷீர் உடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வாகன தணிக்கை செய்வதை பார்த்து அவர் பயத்தில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நின்றார்.
அப்போது அவரது மகன் முபஷீர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் சென்று, அங்கிள் நான் உங்கள் தொப்பி அணிந்து பைக் ஓட்டணும் என்று தனது ஆசை தெரிவித்தான். உடனே அவநது ஆசையை நிறைவேற்றும் வகையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சிறுவனை அமரவைத்து, தனது தொப்பியை அவனுக்கு அணிவித்து, பஸ் நிலையம் வரை அழைத்து சென்று மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டார்.
சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவை பொதுமக்கள் பாராட்டினர். இதேபோல் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோரும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவை பாராட்டினர்.