ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொழிற் கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.;

Update: 2022-04-29 11:40 GMT
கே.வி.குப்பம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் வேலூர் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம் குடியாத்தத்தில் நடந்தது. முன்னாள் தலைவர் எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மகாலிங்கம், கலைச்செல்வன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் டி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநில, மாவட்ட செயல்பாடுகளை விளக்கி பேசினார். 

தற்போது பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கி வருகிறார்கள். மருத்துவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களின் பாதுகாப்புக்காக மருத்துவர் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததுபோல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கும் அதிகாரம் குறித்து அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி மேம்பட பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகள், நல்வழி கல்வி வகுப்புகள் ஆகியவற்றை கட்டாயமாக்குவது குறித்து ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்