மோட்டார்சைக்கிள் பந்தயம், வழிப்பறியில் ஈடுபட வசதியாக மடித்து வைக்கும் ‘நம்பர் பிளேட்’ தயாரித்த 2 பேர் கைது

ஆலந்தூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள கடையில் மோட்டார்சைக்கிள் பந்தயம், வழிப்பறியில் ஈடுபட வசதியாக மடித்து வைக்கும் ‘நம்பர் பிளேட்’ தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-29 07:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் வழிப்பறி செய்பவர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க தங்கள் மோட்டார்சைக்கிள் எண்ணை மறைக்கும் வகையில் காந்தம் மூலம் மடித்து வைக்கும் வகையிலான நவீன ‘நம்பர் பிளேட்’ பயன்படுத்தி வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போக்குவரத்து உதவி கமிஷனர் குமாரவேல், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஆலந்தூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள கடையில் இந்த வகையிலான நவீன ‘நம்பர் பிளேட்’ தயாரித்து விற்பது தெரிந்தது. இதையடுத்து சரத்குமார், சுகுமார் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த ‘நம்பர் பிளேட்’களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்