30 வீடுகள் இடித்து தரைமட்டம்
ஓமலூர் அருகே ரெயில்வே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே ரெயில்வே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு
ஓமலூர் அருகே உள்ள சக்கரசெட்டிப்பட்டி ஊராட்சியில் நாலுகால் பாலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சேலம்-சென்னை ெரயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி ெரயில்வேக்கு சொந்தமான இடம் என கூறி ெரயில்வே துறையினர் அளவீடு செய்து முட்டு போட்டிருந்தனர். எனவே ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றிக்கொள்ள நேற்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
30 வீடுகள்
இந்த நிலையில் கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சேலம் மண்டல ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, சேலம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரம் கொண்டு வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது வீடு இடிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த செல்வி என்ற பெண் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் உடனடியாக மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மொத்தம் 30 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, 50 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வீடுகட்டி வசித்து வருகிறோம். வீடு கட்டும்போது ரெயில்வே துறைக்கு சொந்தமானது என கூறி தடுத்து இருந்தால் எங்களுடைய பணம் விரயம் ஆகாமல் இருந்திருக்கும். தற்போது தங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தருவதாக கூறுகின்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வீடுகள் இடிக்கப்பட்டதால் வீதியில் தங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இடத்தை ஒதுக்கி தர வேண்டும். மேலும் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.