இந்தி தேசிய மொழி அல்ல: நடிகர் சுதீப்புக்கு பசவராஜ் பொம்மை ஆதரவு

இந்தி தேசிய மொழி அல்ல என்று நடிகர் சுதீப் கூறியதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆதரவு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-28 20:54 GMT
பெங்களூரு:

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

4-வது அலை தொடங்கவில்லை

  நான் நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். அங்கு முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறேன். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் கலந்து கொள்கிறார். மத வெறுப்பு பிரசாரம் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக நடக்கிறது. இது கர்நாடகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் நடக்கிறது. மத வெறுப்பு கருத்துகளை தடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றுவோம்.

  கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கவில்லை. கடந்த 9-ந் தேதிக்கு பிறகு கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இதை அரசு கவனித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களிடம் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. கர்நாடகத்தில் 98 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம். 6 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துவோம். பரிசோதனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மரபணு பரிசோதனை செய்யப்படுகிறது. கர்நாடகத்தில் இதுவரை 8,500 மரபணு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் 8 மரபணு பரிசோதனை கூடங்கள் உள்ளன. இதன் மூலம் உருமாற்றம் அடைந்த வைரஸ்களை கண்டறிய முடியும்.

மத வெறுப்பு விஷயங்கள்

  நடிகர் சுதீப் இந்தி தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சரியானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்தந்த மாநிலங்களில் உள்ள தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. அதை தான் சுதீப் கூறியுள்ளார். இதை அனைவரும் மதிக்க வேண்டும். மத வெறுப்பு விஷயங்கள் குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி கூறியுள்ளார்.

  மதம் என்பது அவரவர்களின் மனதில் உள்ளது. அனைத்து சாதி-மதத்தை சேர்ந்த மக்கள் அமைதியாக, அன்பாக, ஒற்றுமையாக உள்ளனர். பிற நாடுகளில் மதத்தின் பெயரில் பயங்கரவாதம் நடந்துள்ளது. யாரும்-யாருக்கும் அறிவுரை கூற வேண்டியது இல்லை. நமது நாட்டில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் சாசனம் உள்ளது. இதன்படி வாழ்ந்து வருகிறோம். அவரவர் பணிகளை செய்தால் போதுமானது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்