வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக கூறி மோசடி
தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தொகை பெற்று வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது.
வாழப்பாடி:-
வாழப்பாடியில், தம்மம்பட்டி செல்லும் சாலையில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையில் வாங்கும் டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று தருவதாக கூறினர். இதை நம்பி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளின் நகல்களை கொடுத்து கடன் பெற விண்ணப்பித்துள்ளனர், அனைத்து விண்ணப்பங்களையும் வாங்கிக்கொண்ட அந்த பர்னிச்சர் கடை உரிமையாளர், கடன் தொகை வந்ததும், பொருட்கள் தருகிறேன் என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில் வாங்காத வீட்டு உபயோக பொருட்களுக்கு கடன் வாங்கியது போல் தவணை தொகையை செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் போன் அழைப்பு வந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட் பர்னிச்சர் கடைக்கு சென்று பார்த்த போது அவர் கடையை காலி செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது,
இதையறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 16 பேர் தங்களது பெயரில் கடன் பெற்று மோசடி செய்த கடை உரிமையாளர் மற்றும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வாழப்பாடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீசார், மோசடி வழக்கை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி சேலத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.