கர்நாடகத்தில் பால் விலை உயர்வா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்
கர்நாடகத்தில் பால் விலை உயருகிறதா? என்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.
பெலகாவி:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெலகாவி பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு மந்திரிசபையில் மேலும் இடம் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். நான் நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். முதல்-மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறேன். பின்னர் மீண்டும் பெங்களூரு திரும்புகிறேன். மந்திரிசபை குறித்து விவாதிக்க கட்சி மேலிடம் அழைத்தால் டெல்லி சென்று விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் ஈடுபடுவது தொடர்பான விவகாரத்தை போக்குவரத்து மந்திரி பார்த்து கொள்வார். பெலகாவி மாவட்டத்தை பிரிப்பது குறித்து நீண்ட காலமாக ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பெலகாவியின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் விலை உயர்வு குறித்து நிர்வாக ரீதியாக முடிவு எடுக்கப்படும். அதுபற்றி உங்களிடம் எதுவும் கூற முடியாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.