ஈரானிய கொள்ளையர்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு
சேலம் மாநகரில் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களில் கைதான ஈரானிய கொள்ளையர்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம்:-
சேலம் மாநகரில் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களில் கைதான ஈரானிய கொள்ளையர்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழிப்பறி
சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஓமலூர் அருகே 2 பேர், சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சென்று பின்னர் அவர்கள் காரில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதும் தெரிந்தது. அவர்களை போலீசார் துரத்தி சென்ற போது அவர்கள் கர்நாடக மாநிலத்திற்குள் சென்றது தெரிந்தது. அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஈரானிய கொள்ளையர்கள்
அப்போது அவர்கள் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் ஜார்ஜின சோலி பகுதியில் தங்கி இருப்பது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்த போது ஆசிப் அலி மகன் முகமது ஆசிப் அலி (வயது 23), அப்துல் ஜப்பார் மகன் ஷபிஷேக் (30) என்பதும், அவர்கள் சேலத்தில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் கைதானவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதானவர்களின் பூர்வீகம் ஈரான் நாடு என்பதும், அவர்கள் ஒரு குழுவாக இடம் பெயர்ந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்து இந்திய குடியுரிமை வாங்கி உள்ளதும், சிலர் குடியுரிமை வாங்காமல் இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் ஈரானிய கொள்ளையர்கள் என்று கூறுகின்றனர்.
காவலில் விசாரணை
இந்த நிலையில் 2 பேரையும் ஒருநாள் காவலில் விசாரிக்க 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில், சேலம் மாநகரில் எங்கு எல்லாம் நகை பறிப்பில் ஈடுபட்டனர். எவ்வளவு நகை பறித்துள்ளனர். அவர்களது கூட்டாளிகள் யார் என்ற விவரங்களை கேட்டுள்ளோம். தற்போது தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளோம். அவர்களையும் கூண்டோடு பிடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.