மூதாட்டியை கொடுவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு ஜெயில்
மேச்சேரியில் மரம் வெட்டியதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கொடுவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
சேலம்:-
மேச்சேரியில் மரம் வெட்டியதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கொடுவாளால் வெட்டியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மரம் வெட்டியதில் தகராறு
மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 75). கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தை அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (55), அவருடைய மகன் சக்திவேல் (34) ஆகியோர் வெட்டியுள்ளனர். அப்போது, என் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள்? என்று சகுந்தலா அவர்களிடம் கேட்டார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் கொடுவாளால் சகுந்தலாவின் தலையில் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தந்தை, மகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு ஜெயில்
சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, மூதாட்டியை கொடுவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வெங்கடாசலத்திற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். அதேசமயம், இந்த வழக்கில் தொடர்புடைய வெஙகடாசலத்தின் மகன் சக்திவேலை விடுவிடுத்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.