தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
தண்ணீர் இல்லாத கழிப்பறை
ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை துர்நாற்றம் வீசுகிறது. இதுதவிர பத்திரப்பதிவு அலுவலகத்தில் மின்விசிறி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு மின்விசிறி வசதி செய்து தர வேண்டும்.
- கே.ரவிச்சந்திரன், ஓசூர், கிருஷ்ணகிரி.
கிடப்பில் போட்ட சோலார் விளக்கு பணி
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி- பெங்களூரு பிரதான சாலையும், மாவட்டத்தின் நுழைவு சாலையுமான கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சோலார் விளக்குகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட கான்கிரீட் போடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சோலார் விளக்குகள் அமைக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் அந்த சாலை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் சோலார் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாந்தகுமார்,, பழைய தர்மபுரி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் புதூர் தெருவில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.காளிதாஸ், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் எல்.ஐ.சி. காலனி 17-வது வார்டு சரஸ்வதி தெருவில் 20 நாட்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாததால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை தினமும் அள்ள வேண்டும்.
-குமார், சரஸ்வதிதெரு, சேலம்.
தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள்
சேலம் தாரமங்கலம் 6-வது வார்டு பாவடி ஆறுமுகம் தெருவில் வீட்டின் அருகே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே இருக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பாவடி, சேலம்.
கூடுதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மூங்கில்பாடிக்கு கருப்பூர் வழியாக குறைந்த எண்ணிக்கையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவில் டவுன் பஸ்கள் வருவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சேலம்- மூங்கில்பாடி இடையே கருப்பூர் வழியாக கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.
-கலைச்செல்வி, மூங்கில்பாடி, சேலம்.
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடிக்கு உட்பட்ட ஸ்ரீஅம்பாள்நகர் செல்லும் சாலையில் இருபுறமும் கற்களும், முட்களும், தென்னை மட்டைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சிரமின்றி செல்ல ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். -ராஜேஷ், அம்பாள்நகர், திருச்செங்கோடு.
தெருநாய்கள் தொல்லை
சேலம் 12-வது வார்டு பிள்ளையார் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக 5 உள்ளன். இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி சண்டை போடுகின்றன. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-இளவரசன், கோர்டு ரோடு காலனி, சேலம்.
குடிநீர் பிரச்சினை
சேலம் சின்னதிருப்பதி ஆண்டாள் நகரில் 3 மாதங்களாக போதிய குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-சுப்ரமணியம், ஆண்டாள்நகர், சேலம்.