பூ, காய்கறி மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லையில் பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது 63 தராசு, எடைகற்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. .
நெல்லை:
சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் வழிகாட்டுதலின் படியும் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா ஆலோசனைப்படி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை ஆய்வர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வர்கள் ஒரு குழுவாக பாளையங்கோட்டை மற்றும் நெல்லை சந்திப்பு பகுதிகளில் உள்ள பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
அப்போது முத்திரையிடப்படாத, மறுமுத்திரையிடப்படாத மற்றும் தரப்படுத்தப்படாத மேஜை தராசுகள், மின்னனு தராசுகள், இரும்பு எடைக்கற்கள், அளவைகள் உட்பட மொத்தம் 63 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவற்றை பயன்படுத்தியவர்கள் மீது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை நெல்லை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரும், துணை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரியுமான ஆனந்தன் தெரிவித்து உள்ளார்.