ரெயில்வேகேட் மீது லாரி மோதல்
ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் ரயில்வே நிலையத்தையொட்டி விடத்தகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அமைந்து உள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் இந்த வழியாக காமராஜர்புரம் பகுதியில் இருந்து சிமெண்டு மூடைகள் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.
இந்த லாரி வரும் நேரம் ரயில்வே கிராசிங்கை ெரயில் கடப்பதற்காக கேட் கீப்பர் கேட்டை மூடினார். கேட் முழுவதும் மூடுவதற்குள் லாரியை வேகமாக ஓட்டி கடந்துவிட நினைத்து லாரி டிரைவர் படுவேகமாக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது லாரி கேட்டில் மோதியது. இதில் ெரயில்வே கேட் பழுதானது. ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ரயில்வே கேட்டை சரிசெய்யும் பணி நடந்தது. இதனால் அந்த பகுதியை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலை 4 மணிக்குமேல் ரயில்வே கேட் சரி செய்யப்பட்ட பின்பு அந்தபகுதியில் 5 மணி நேரத்துக்குபிறகு போக்குவரத்து சீரானது.