திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிபாய்ந்த காளைகள்
திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள மாணிக்கநாச்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் 10-ம் திருநாளான நேற்று கண்டரமாணிக்கத்தில் உள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து கிராமத்தார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால் ஒரு சில காரணத்தினால் மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து கிராமத்தின் சார்பில் நேற்று மஞ்சுவிரட்டு நடத்த யாரும் முன்வரவில்லை. மேலும் கண்டரமாணிக்கத்திற்கு வரும் முக்கியமான வழிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபடி மஞ்சுவிரட்டிற்கு அனுமதியில்லாததால் அந்த வழியாக வந்த காளைகளை திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மஞ்சுவிரட்டு காளைகளை மினி லாரியில் ஏற்றி வந்த காளைகளின் உரிமையாளர்கள் வழக்கமாக நடைபெறும் மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு பதிலாக கண்டரமாணிக்கம் அருகே உள்ள வெளியாத்தூர் கிராமத்தில் உள்ள அறுவடை செய்த வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட தொடங்கினர். இதையடுத்து அந்த வயல்வெளி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தனர்.
இதில் பங்கேற்ற பல்வேறு காளைகள் சீறிபாய்ந்து சென்றது. இவ்வாறு சீறிபாய்ந்து சென்ற சில காளைகளை அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் அடக்க முயன்றனர். அவர்களை சில காளைகள் புரட்டி எடுத்தும், சில காளைகள் முட்டி தூக்கி வீசியபடியும் சென்றது. இதனால் ஒரு சிலர் லேசான காயமடைந்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி கண்டரமாணிக்கம் பகுதியில் உள்ள வீடுகள் தோறும் மதியம் அசைவ விருந்து பரிமாறப்பட்டது