வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு நெல்மூட்டைகள் கடத்தலா?

வெளி மாவட்டங்களில் இருந்து கொள்முதல் நிலையங்களில் திருட்டுத்தனமாக விற்பதற்காக நெல் மூட்டை களை வியாபாரிகள் கடத்தி வருகிறார்களா? என போலீசார் லாரிகளை மறித்து சோதனை செய்தனர்.

Update: 2022-04-28 19:57 GMT
தஞ்சாவூர்:
வெளி மாவட்டங்களில் இருந்து கொள்முதல் நிலையங்களில் திருட்டுத்தனமாக விற்பதற்காக நெல் மூட்டை களை வியாபாரிகள் கடத்தி வருகிறார்களா? என போலீசார் லாரிகளை மறித்து சோதனை செய்தனர்.
நெல் விற்பனை
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்மு தல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் லாரிகளில் நெல்மூட்டைகளை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.
இதனால் இங்குள்ள விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் சிரமம் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ட்ரான்ஷீட் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போலீசார் சோதனை
இந்த படிவங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும், உரிய ஆவணங்கள் இன்றி செல்வதாக கூறி அதனை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி தஞ்சையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், போலீஸ் ஏட்டுகள் வெற்றிவேல், மணிகண்டன், செல்வராஜ், நிகிலா மற்றும் போலீசார் நேற்று தஞ்சை ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள வித்யாநகரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை மறித்து சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்