மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
தஞ்சை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் 650 பேர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர:
தஞ்சை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் 650 பேர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணிஅதிஷ்டராஜ் வரவேற்றார்.
விழாவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் பார்த்தசாரதி, டாக்டர் பாலாஜிகணேஷ், ரெட்கிராஸ் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.
650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
இதில் 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், சக்கர நாற்காலி, குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 650-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சை மாவட்ட பிரிவின் சார்பில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் பாபு நன்றி கூறினார்.