பழங்குடி மக்கள் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் பழங்குடி மக்கள் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்ட பகுதிகளை சேர்ந்த வண்ணான்குடிகாடு, ராஜேந்திர பட்டினம், சத்தியவாடி, சின்ன வடவாடி, கிளிமங்கலம், கொசப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் இந்து இருளர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவிற்கு மனைவரி பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும். அதனை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி மக்கள் விடுதலை கட்சி சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலியபெருமாள், ராமலிங்கம், ரமேஷ், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாநில அமைப்பாளர் ராமலிங்கம், மாநில தலைவர் தங்கமணி, அனைத்து மக்கள் சேவை இயக்க நிறுவனர் தங்கம் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் வடிவேல், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் முத்துவேல் நன்றி கூறினார்.