தட்டி கேட்டவரை அரிவாளால் வெட்டிய மெக்கானிக் கைது
ராமநாதபுரம் அருகே டி.வி.யை 2 ஆண்டுகளாக வேலை பார்த்து தரவில்லை என்பதால் தட்டி கேட்டவரை அரிவாளால் வெட்டிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள சடையன்வலசை பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 38). இவர் தனது டிவி பழுதானதால் வாணி பஸ்நிறுத்தம் பகுதியில் கடை வைத்துள்ள குயவன்குடி பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த வேலவன் (45) என்ற மெக்கானிக்கிடம் கொடுத்தாராம். இந்த டிவியை பழுது பார்த்து கொடுக்காத நிலையில் மோகன் வெளிநாடு சென்றுவிட்டாராம். இதன்பின்னர் சமீபத்தில் ஊருக்கு வந்த மோகன் தனது டிவியை கேட்டுள்ளார். வேலைபார்த்து தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காரிக்கூட்டம் பஸ்நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த மோகன் அந்த வழியாக வந்த வேலவனிடம் டிவி குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வேலவன் அரிவாளால் மோகனை சரமாரியாக வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த மோகன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வேலவனை கைது செய்தனர்.