மோட்டார் சைக்கிளில் இருந்து வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர் பலி
வாங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
சுவற்றின் மீது மோதியது
கரூர் பெரிய ஆண்டான்கோவில் பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் சம்பவத்தன்று இரவு மோகனூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வாங்கல் அருகே வந்தபோது திடீரென சுரேசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ராஜவாய்க்கால் பாலத்தின் சுவற்றின் மேல் பகுதியில் மோதியது.
வாலிபர் சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறிய சுரேஷ் ராஜவாய்க்காலில் விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.