ஆவணத்தாங்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களின் புத்தக பை சுமையை குறைக்க புதிய திட்டம் மாணவ-மாணவிகளிடம் வரவேற்பு

ஆவணத்தாங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவர்களின் புத்தக பை சுமையை குறைக்க புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது மாணவ-மாணவிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2022-04-28 18:53 GMT
புதுக்கோட்டை:
பாடபுத்தகம்
பள்ளி மாணவர்கள் புத்தக பையை தோளில் சுமந்து கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு கொண்டு செல்லும் புத்தக பையில் அளவுக்கு அதிகமான எடை இருப்பதை அறிவர். இருப்பினும் மாணவர்கள் அதனை சுமந்து செல்வார்கள். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் புத்தக பை சுமையை குறைக்க ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளனர்.  மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது புத்தகம் மற்றும் நோட்டுகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பையில் எடுத்து வருவது உண்டு. இவ்வாறு பள்ளிக்கு வந்த பின் மீண்டும் வீடு திரும்பும் போது அனைத்து புத்தகங்களையும், நோட்டுகளையும் பொருட்களையும் சுமந்து கொண்டு செல்வதை தவிர்க்க இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
மஞ்ச பை
மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் பையை பள்ளி வகுப்பு முடிந்த பின் அதே வகுப்பில் வைத்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்லும் போது தேவையான வீட்டு பாடம் படிக்க வேண்டியது, எழுத வேண்டிய உள்ள நோட்டுகளை மட்டும் கொண்டு செல்ல தனி பை கொடுக்கப்படுகிறது. மற்றவை பள்ளியிலேயே அந்தந்த வகுப்பறையில் வைக்க தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறு பள்ளி முடிந்த பின் கொண்டு செல்லும் பையை மறுநாள் காலையில் பள்ளிக்கு வரும் போது எளிதாக தூக்கி கொண்டு வர முடியும். இதில் புத்தக பை சுமை பாதி அளவு குறைந்து விடுகிறது. இந்த திட்டம் மாணவ-மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2019-ம் ஆண்டு தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு பேக் வழங்கப்பட்டது. தற்போது புதிதாக மஞ்ச பை, துணி பை வழங்கப்படுகிறது. இந்த பையை மாணவ-மாணவிகள் எடுத்து சென்று வருவதற்கு எளிதாக உள்ளதால் அவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 
பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 230 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அனைவருக்கும் இந்த பை தற்போது வழங்கப்பட்டுள்ளதோடு, அந்தந்த வகுப்புகளில் பைகளை வைக்க தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

மேலும் செய்திகள்