5 வீடுகளில் கொள்ளை முயற்சி
மேல்மலையனூா் அருகே 5 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் நகை-பணம் சிக்காததால் பொருட்களை வீசி எறிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம்
மேல்மலையனூர் அருகே எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் ஏழுமலை(வயது 42). விவசாயியான இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அருகர்கோவில் தெருவில் உள்ள விஜயகுமார்(60) என்பவரின் வீடு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மனைவியிடம் சென்னை சென்றிருந்த விஜயகுமார் திரும்பி வராததை அறிந்து கொண்ட அவர் சந்தேகமடைந்து ஏழுமலையின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு அரைக்கால்சட்டை அணிந்த 4 மர்ம நபர்கள் கையில் தடியுடன் சென்றதைப் பார்த்து கூச்சலிட்டார். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் விஜயகுமாரின் வீ்ட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்காங்கே சிதறி கிடந்தன.
மேலும் 4 வீடுகளில்
இதேபோல் அதே தெருவை சேர்ந்த விமல் (55), மேலாண்டைத் தெரு ஏழுமலை (50), தேவகுமார் (38) மற்றொரு ஏழுமலை (50) ஆகியோரது வீட்டிளிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அடுத்தடுத்து 5 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பூட்டு உடைக்கப்பட்ட 5 வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
திருடு போகவில்லை
குறிப்பிட்ட 5 வீடுகளின் உரிமையாளர்களும் சென்னையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது 5 வீடுகளிலும் நகை-பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்பதும், நகை-பணம் சிக்காததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருட்களை வீசி எறிந்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ கதவுகளில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து 5 வீடுகளில் பூட்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.