தற்காலிகமாக ஒத்திவைப்பு: கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர் பணிக்கான நேர்காணலுக்கு வந்தவர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேர்காணலுக்கு வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-28 18:45 GMT
புதுக்கோட்டை:
நேர்காணல் தேர்வு
புதுக்கோட்டை மச்சுவாடியில் கால்நடை பண்ணை அமைந்துள்ளது. இதில் கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 30-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவிப்பு வெளியானது. 
இந்த நிலையில் நேற்று நேர்காணல் நடைபெறுவதற்காக முன்கூட்டியே அழைப்பாணை, விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கால்நடை பண்ணை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு இந்த ஒத்திவைப்பு விவரம் எதுவும் தெரியவில்லை. மேலும் முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை.
சாலை மறியல்
கால்நடை பண்ணையில் நுழைவு வாயிலில் அறிவிப்பு பதாகை ஒன்று நேற்று ஒட்டப்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் இதற்காக வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் திடீரென நேர்காணலை ஒத்திவைப்பதாக அறிவித்ததை கண்டித்து புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேர்காணலை அரசு ஒத்திவைத்திருப்பதாகவும், தேர்வு நடைபெறுவது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து சமாதானப்படுத்தினர். அதன்பின் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

மேலும் செய்திகள்