பூஜை பொருட்களுக்கு பக்தரிடம் முன்பணம் கேட்கும் ஆடியோவால் பரபரப்பு:தீர்த்தமலை கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம்
பூஜை பொருட்களுக்கு பக்தரிடம் முன் பணம் கேட்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தீர்த்தமலை கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.;
தர்மபுரி:
பூஜை பொருட்களை வாங்கி வைக்க பணம் கேட்டது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் தீர்த்தமலை கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
பூஜை பொருட்களுக்கு பணம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களில் ஒருவரான பாலாஜி (வயது 40) தீர்த்தமலை கோவிலுக்கு வரும் பக்தர் ஒருவருடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அதில் சிறப்பு பூஜை செய்ய முன்கூட்டியே ரூ.3 ஆயிரம் கொடுத்தால் பூஜைக்கு தேவையான பொருட்களை நாங்களே வாங்கி தயார் நிலையில் வைத்து இருப்போம். பூஜை பொருட்களை கோவிலுக்கு வரும்போது நீங்கள் தனியாக வாங்கி வர வேண்டியதில்லை என்று பேசியுள்ளார். இது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பணி இடைநீக்கம்
தீர்த்தமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பூஜை பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைப்பது தொடர்பாக இதுபோன்ற விதிமுறை எதுவும் இல்லாத சூழலில் பக்தரிடம் அர்ச்சகர் பணம் கேட்டது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து அர்ச்சகர் பாலாஜியை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.