பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்-டாக்டர் அம்பேத்கர் படம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-28 18:38 GMT
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் அம்பேத்கர் படத்தை அங்கேயே மாட்டி விட்டுச்சென்றனர். விடுமுறை முடிந்து வந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழித்தேவன், அலுவலக முகப்பில் இருந்த டாக்டர் அம்பேத்கர் படத்தை ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் மாற்றி வைக்க கூறியுள்ளார். அதன்படிடாக்டர் அம்பேத்கரின் படம் கூட்டரங்கிற்கு மாற்றப்பட்டது.
இதனை கண்டித்தும், முன்பு வைத்த இடத்திலேயே டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் அன்வர் தலைமையில் ஒன்றிய செயலாளர் பழனி, நிர்வாகிகள் அதியமான், சுபாஷ், மாயக்கண்ணன், செந்தில்குமார், அரவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா, பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் மற்றும் அலுவலர்கள் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்ததால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்