நாகமங்கலம் கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
நாகமங்கலம் கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி:
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்கள் எந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்பது தொடர்பாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்திற்கு சென்று அங்கு ஆஞ்சநேயர் சாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கனிம வளங்கள் அதிக அளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறநிலையத்துறையில் ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பேட்டராய சாமி கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது. அதன்நிலை என்ன என்று தெரியவில்லை. நகை, ஆவணங்கள் எதுவும் மதிப்பீடு செய்யப்படவில்லை. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை, போலீசார் உடன் இருந்தனர்.