செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளி, ரெயிலில் அடிபட்டு சாவு
செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளி, ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
ஓசூர்:
ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியை சேர்ந்த தவுபிக் அன்சாரி. இவருடைய மகன் தஸ்லிம் அன்சாரி (வயது 19). கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஓசூர் வந்த இவர், ரெயில்வே டபுளிங் லைனில் தற்காலிக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் அன்னை நகர் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தார். நேற்று ஓசூர்- தளி ரோடு அன்னை நகர் பகுதியில் செல்போனில் பேசியவாறு தஸ்லிம் அன்சாரி ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு தஸ்லிம் அன்சாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.