பள்ளி வகுப்பறையில் மோதல்; 6 மாணவர்கள் கைது

ராமநாதபுரத்தில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-04-28 18:23 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தை அடுத்த நயினார் கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று பள்ளிக்கு பஸ்சில் வந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
இதன் எதிரொலியாக வகுப்பறையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மேஜைகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் பள்ளி மாணவர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 மாணவர்களை கைது செய்தனர். இவர்கள் இதற்கு முன்பு இதே போன்று மோதல் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், பெற்றோர் மூலம் சமாதானப்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்