குமாரபாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது

குமாரபாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது

Update: 2022-04-28 18:21 GMT
நாமக்கல்:
குமாரபாளையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தனி வருவாய் ஆய்வாளர் பிரவீன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினருக்கு குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் உள்ள டீக்கடை அருகில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ஆம்னி வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தலில் சடையம்பாளையம் பெரியார் நகர் கமலக்கண்ணன் (வயது 31), விமல்ராஜ் (31), ஈரோடு மாவட்டம் பவானி கூலிக்காரன்பாளையம் அர்த்தனாரீஸ்வரன் (34) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் பிடித்து குமாரபாளையம் போலீசார், நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலனிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்த குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்