பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்களில் ஒரு வாரம் துண்டு உற்பத்தி நிறுத்தம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்களில் ஒரு வாரம் துண்டு உற்பத்தி நிறுத்தம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Update: 2022-04-28 18:20 GMT
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறி கூடங்களில் அதிகளவில் துண்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் துண்டுகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நூல் விலை உயர்வு, அதிகளவில் தேக்கம், விற்பனை சரிவு உள்ளிட்ட காரணங்களால் துண்டு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். 
இதுஒருபுறம் இருக்க பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் துண்டு உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துண்டு தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு அதாவது வருகிற மே 4-ந் தேதி வரை விசைத்தறி கூடங்களில் துண்டு உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் துண்டு தொழிலை நம்பி உள்ள சுமார் 1,000 தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக துண்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்