மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் அகற்றம்- யோகி ஆதித்யநாத்திற்கு, ராஜ் தாக்கரே பாராட்டு

மத வழிபாட்டு தலங்களில் சட்டவிரோத ஒலிப்பெருக்கிகளை அகற்றிய உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்திற்கு ராஜ் தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-28 18:12 GMT
கோப்பு படம்

மும்பை, 

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

குறிப்பாக வருகிற 3-ந் தேதிக்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கியை நீக்காவிட்டால், தங்கள் கட்சியினர் மசூதிகளுக்கு வெளியே ஒலி பெருக்கியை வைத்து அனுமன் பாடல்களை ஒலிபரப்புவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கான உத்தரவை வகுத்துள்ளதால், அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு தான் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. மத வழிபாட்டு தலங்களில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை குறைந்த ஒலி அளவுக்குள் பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், “மத வழிபாட்டு தலங்களில் குறிப்பாக மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றியதற்காக யோகி ஆதித்யநாத் அரசுக்கு நான் முழு மனதுடன் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். துரதிருஷ்டவசமாக மராட்டியத்தில் எங்களுக்கு யோகிக்கள் இல்லை” என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்