விழுப்புரம் காகுப்பம் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விழுப்புரம் காகுப்பம் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2022-04-28 17:52 GMT

விழுப்புரம்

காகுப்பம் ஏரி

விழுப்புரம் காகுப்பத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரியில் கடந்த 2007-ம் ஆண்டு பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்பட்டது. நீர் ஆதாரங்கள், நீர் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராகவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், நீர்நிலைகள் உள்ள இப்பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்டக்கூடாது என்று காகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

முற்றுகை

இந்த சூழ்நிலையில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்தை காகுப்பம் ஏரியில் புதிதாக தொடங்க முடிவு செய்து மீண்டும் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளங்களை தோண்டி வருகின்றனர். 
இதை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் காகுப்பம் ஏரி மீட்பு கூட்டமைப்பினர் பாபு, அகிலன், சந்திரசேகர், எழில்இளங்கோ, நாராயணன், தீன்முகமது, நாகராஜன் உள்ளிட்டோர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பேச்சுவார்த்தை

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே காகுப்பம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியே விடுவதால் காகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே மக்கள் எதிர்ப்பை மீறி கட்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து நிரந்தரமாக மூடுவதற்கும், அதேபோல் விழுப்புரம் நகராட்சி தற்போது புதிதாக கட்ட முற்படும் கழிவுநீர் தொட்டி பணிகளை தடுத்து நிறுத்தியும், இதன் மூலம் பரவும் நோய்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதன்பேரில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்