பெரம்பலூரில் பல்துறை பணி விளக்க கண்காட்சி இன்றுடன் நிறைவு

பெரம்பலூரில் பல்துறை பணி விளக்க கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

Update: 2022-04-28 17:46 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவையொட்டி பல்துறை பணி விளக்க கண்காட்சி பாலக்கரையில் கடந்த 24-ந்தேதி தொடங்கி தினமும் மாலை நேரத்தில் நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் தொடர்பான 20-க்கும் மேற்பட்ட அரங்குகளை விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்படுகின்ற அரசு திட்டங்கள் குறித்த விளக்கங்களும், அரசுத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் கண்காட்சியில் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த கண்காட்சியில் தினமும் மாலை நேரத்தில் நடைபெறும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகள், நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து கண்டுகளித்து செல்கின்றனர். இந்த கண்காட்சி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்