பாசனத்துக்காக ஜூன் 1-ந் தேதி அணைகள் திறப்பு

குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக ஜூன் 1-ந் தேதி அணைகளை திறக்க கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2022-04-28 17:39 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக ஜூன் 1-ந் தேதி அணைகளை திறக்க கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாசனத்துக்கு அணைகள் திறப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசித்தபிறகு முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்திருந்தார். அதன்படி விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் வசந்தி, பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, செண்பக சேகரபிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அணை திறப்பு
கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி பாசனத்துக்காக அணைகளை திறப்பது என்றும், இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பது, ஜூன் 1-ந் தேதிக்கு முன்பாக விவசாயிகள் பயிர் சாகுபடிகளை தொடங்குவது, மே மாத இறுதிக்குள் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி முடிக்க நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அரவிந்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குமரி மாவட்டத்தில் அடிக்கடி பெய்யும் சாதாரண மழைக்கே நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படுவதும், மழைச் சேதங்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. எனவே அரசும், கோர்ட்டுகளும் நீர்நிலைகளில்உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டன. இதைத்தொர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த சில மாதங்களாக அகற்றப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ஒருசில ஆக்கிரமிப்பாளர்களும், சில அமைப்புகளும் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு விவசாயிகள் சார்பில் மிகக்கடுமையான ஆட்சேபனையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்துக்குள்ளாக முழுமையாக அகற்ற வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்