மின்தடையை கண்டித்து விழுப்புரத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மின்தடையை கண்டித்து விழுப்புரத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-04-28 17:39 GMT

விழுப்புரம்

மின் தடை

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள், கைக்குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மின் தடை பிரச்சினையால் தேர்வுக்கு மாணவ- மாணவிகள் சரிவர படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுபற்றி சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் மின் தடை பிரச்சினையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு, தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி மின்தடை பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதன்பேரில் பொதுமக்கள், இரவு 11.15 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்