கிராமசபை கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் பணிகளில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
கிராமசபை கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் பணிகளில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
விழுப்புரம்
ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளரின் வழிகாட்டுதலின்பேரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொழிலாளர் தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடையே விவாதிக்க வலியுறுத்த வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளின் ஆண்டறிக்கை குறித்த விவரங்கள் ஊராட்சி அலுவலக விளம்பர பலகையில் விளம்பரப்படுத்திட வேண்டும்.
வெளிப்படை தன்மையுடன்
கிராம சபையின்போது பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்து துறைவாரியாக அனுப்பும் பணியினை உடனே மேற்கொள்ள வேண்டும். கிராமசபை கூட்ட நாளன்று அனைத்து துறைகளும் பங்குபெறும் வகையில் தகவல் தெரிவித்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெளிப்படை தன்மையுடன் அரசு வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.