காரைக்குடி வாலிபர் கழுத்தை அறுத்து கொலை:2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
சிவகங்கை
காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
வாலிபர் படுகொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 27). கூலி தொழிலாளி. இவரை கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த முருகன் என்ற திருமுருகன் (31), காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமு என்ற ராம்குமார் (32), என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த நாசர் (23), பர்மா காலனியை சேர்ந்த வேல்முருகன் (39) ஆகிய 4 பேரும் மது குடிக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் மது போதையில் இருந்த திருநாவுக்கரசு கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததாக அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரபாகர் ஆஜரானார்.
இரட்டை ஆயுள் தண்டனை
வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்தியதாரா, குற்றம் சாட்டப்பட்ட முருகன் மற்றும் ராமு ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.