திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரத்தில் அதிநவீன மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-28 17:33 GMT
திருவட்டார், 
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரத்தில் அதிநவீன மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்று
திருவட்டார்   ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கோவில் விளக்கணி மாடத்தின் இறுதி கட்ட பணிகள், தரை சீரமைக்கும் பணிகள் மற்றும் மியூரல் ஓவியப்பணிகள் போன்றவை நடக்கிறது. 
மேலும், கோவில் பிரகாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதிநவீன மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. உள்பிரகாரத்தில் 10 விளக்குகள் பொருத்தும் பணி முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து இந்த விளக்குகள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.  தற்போது வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் மொத்தம் 58 விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
கண்காணிப்பு கேமரா
மேலும் கோவிலுக்கு வருபவர்களை கண்காணிக்கும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு வாயில் உள்பட அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவிலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டபோது கும்பாபிஷேகம் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மிருத்துஞ்சய ஹோமமும், காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் நடத்தப்படுகிறது.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்