நடுவானில் பறந்த போது டயர் வெடித்தது; பெங்களூரு விமானம் 150 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது
நடுவானில் பறந்த போது டயர் வெடித்த பெங்களூரு விமானம் 150 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது
பெங்களூரு: நடுவானில் பறந்த போது டயர் வெடித்த பெங்களூரு விமானம் 150 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது.
விமான டயர் வெடித்தது
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் 150 பயணிகள், விமானிகள், விமான பணியாளர்கள் என 12 பேர் இருந்தனர். கடந்த 26-ந் தேதி இரவு 11.32 மணிக்கு அந்த விமானம் பெங்களூரு விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கி சென்று கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து இருந்ததை விமான நிலைய பணியாளர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக விமானிக்கு, விமானத்தின் டயர் வெடித்து இருப்பது குறித்து தகவல் கொடுத்தனர்.
பயணிகள் போராட்டம்
இதையடுத்து அந்த விமானி சாதுரியமாக செயல்பட்டு சரியான இடத்தில் பத்திரமாக விமானத்தை நிறுத்தினார். பின்னர் அந்த விமானத்தில் பயணித்த 150 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே அந்த விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணிக்கு பாங்காக் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 140 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்.
ஆனால் விமானத்தில் டயர் வெடித்தது பற்றி பயணிகளுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அந்த பயணிகள் மாற்று விமானத்தில் பாங்காக் புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வானில் பறந்த போதே விமானத்தின் டயர் வெடித்ததும், அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் தெரியவந்தது.