தொழிலாளி வீட்டில் திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது
ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து தொழிலாளி வீட்டில் திருடிய பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து தொழிலாளி வீட்டில் திருடிய பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
நகைகள் திருட்டு
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சகாயஜாலின் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 26-ந் தேதி அன்று வழக்கம்போல் சகாயஜாலின் வேலைக்கும், 2 பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும் சென்றனர். விமலாவும் மதியத்திற்கு பிறகு வீட்டை பூட்டி விட்டு சாவியை அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மாலையில் விமலா வீட்டுக்கு வந்த போது அதிர்ச்சி அடைந்தார். அதாவது வீட்டில் இருந்த 5½ பவுன் தாலி செயின், 3 பவுன் நெக்லஸ் என மொத்தம் 8½ பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. ஆனால் அதனுடன் இருந்த 15 பவுன் நகை அப்படியே இருந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் விமலா புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
யாரோ மர்மநபர் விமலா வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து நகையை திருடியதால், விமலாவுக்கு நன்கு அறிமுகமான நபர் தான் நகையை திருடியிருக்கலாம் என போலீசார் கருதினர். அந்த கோணத்தில் விசாரணை நடந்தது.
பக்கத்து வீட்டு பெண் கைது
இதனால் விமலாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜோஸ் என்பவரது மனைவி ரெப்சி (வயது 27) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளார். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், விமலாவின் வீட்டில் நகை திருடியதை ஒப்பு கொண்டார்.
விமலா மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து நகைகளை திருடியதாக ரெப்சி போலீசாரிடம் தெரிவித்தார். திருடிய நகைகளை வடக்கன்குளத்தில் ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்ததையும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் அந்த வங்கிக்கு சென்று 8½ பவுன் நகைகளையும் மீட்டனர். தொடர்ந்து ரெப்சியை அதிரடியாக கைது செய்தனர்.