கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றினால் மக்கள் பயனடைவார்கள்

கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றினால் மக்கள் பயனடைவார்கள் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-04-28 16:42 GMT
பேரூர்

கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றினால் மக்கள் பயனடைவார்கள் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முப்பெரும் விழா

கோவையை அடுத்த பேரூரில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, தேசிய சிந்தனைக்கழகம் (அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள், 75-ம் ஆண்டு சுதந்திரதின பெருவிழா ஆகிய முப்பெரும் விழாவை நடத்தியது.

 விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், கவுமார மடாலயம் குமரகுருபர அடிகளார் பேசினர்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தமிழிடம் இருந்து எங்கெல்லாம் அழைப்பு வருகிறதோ அங்கெல்லாம் தமிழிசை வருவேன். இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை, ஓராண்டாக கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

காவி வலிமையாக உள்ளது

ஆன்மிகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. தமிழால் கோவில் கதவுகள் திறந்ததையும், தமிழால் கோவில் கதவுகள் மூடியதையும் நாம் பார்த்துள்ளோம். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை உணர்த்தியது மடங்கள். தமிழ் இல்லாமல் ஆன்மிகம் இல்லை, ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதை மடங்கள் உணர்த்தியுள்ளன.

கருப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் அரசு, மடாதிபதிகளை அழைத்து பேசும்போது, அவர்களுக்கு உரிய இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும். தமிழகத்தில் காவி வலிமையாக உள்ளது. தேசிய கொடியில் உள்ள காவியையும், அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும் தான் கூறுகிறேன்.

மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும், கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும். கவர்னர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. கவர்னர்கள் மக்களில் ஒருவர் தான். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர்களை தரக்குறைவாக பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும். துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும், அரசியல் சார்பு இருக்க கூடாது என்பதற்காக தான் துணைவேந்தர்களை கவர்னர்கள் நியமிக்கின்றனர்.

தமிழக அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதே சமயம் கவர்னரும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கவர்னர்களும், முதல்-அமைச்சர்களும் இணைந்து பணியாற்றினால் மக்கள் பயனடைவார்கள். மசோதாக்களின் மீது முடிவெடிக்க கவர்னர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்