இளம்பெண்ணை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை
கோவையில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த கணவர், கள்ளக்காதலி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை
கோவையில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த கணவர், கள்ளக்காதலி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வரதட்சணை கேட்டு கொடுமை
கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவருக்கும், கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த நிர்மல் சூர்யா (வயது 32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. நிர்மல் சூர்யா தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
திருமணத்தின்போது வரதட்சணையாக 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. இருந்தபோதிலும் கூடுதலாக பணம், நகை வாங்கி வருமாறு தனது மனைவியை நிர்மல் சூர்யா கொடுமைபடுத்தி உள்ளார்.
அத்துடன் அவர் தனது மனைவி படித்த கல்லூரி சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு, கூடுதலாக 15 பவுன் நகை வாங்கி வந்தால்தான் தருவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
அறையில் அடைத்து சித்ரவதை
இதற்கிடையே நிர்மல் சூர்யாவுக்கும், அவருடைய உறவினர் பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த அந்த இளம்பெண் அவரிடம் கேட்டு உள்ளார்.
அதற்கு அவர் கூடுதலாக பணம், நகை வாங்கிவந்தால்தான் உன்னுடன் குடும்பம் நடத்துவேன், இல்லை என்றால் கள்ளக்காதலியுடன்தான் இருப்பேன் என்றுக்கூறி மிரட்டி உள்ளார்.
அத்துடன் அவர் அந்த இளம்பெண்ணை இருட்டான அறையில் 2 நாட்கள் பூட்டி வைத்து உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் சித்ரவதை செய்து உள்ளார். பின்னர் அறையைவிட்டு வெளியே வந்த அந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
5 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து இளம்பெண் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நிர்மல் சூர்யா, அவருடைய கள்ளக்காதலி மற்றும் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.