உப்பள்ளி கலவரத்தில் கைதான மதகுரு உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
உப்பள்ளி கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட மதகுரு வாசிம் பதான் உள்பட 2 பேர் போலீஸ் காவல் முடிந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உப்பள்ளி:
உப்பள்ளி கலவரம்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளியில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது போன்ற வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 16-ந்தேதி வாலிபர் ஒருவரை பழைய உப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து குறிப்பிட்ட சமுதாயத்தினர் வாலிபரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் வாலிபரை ஒப்படைக்க மறுத்ததால் போலீசார், போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போலீஸ் காவல் விசாரணை முடிந்தது
இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 146 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட மதகுரு வாசிம் பதான், ரவுடி தவ்பீக் முல்லா உள்ளிட்டோரும் அடங்குவர்.
இதில் மதகுரு வாசிம் பதானையும், தவ்பீக் முல்லாவையும் கோர்ட்டு அனுமதியுடன் கடந்த 23-ந்தேதி முதல் 5 நாட்கள் வரை போலீஸ் காவலில் எடுத்து பழைய உப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் மத்திய உளவுப்பிரிவு போலீசார் உப்பள்ளிக்கு வந்து கலவரம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வாசிம் பதான் உள்பட 2 பேரின் போலீஸ் காவல் நேற்றுமுன்தினத்துடன்(27-ந்தேதி) முடிவடைந்தது. இதனால் நேற்றுமுன்தினம் இரவே போலீசார் வாசிம் பதானையும், தவ்பீக் முல்லாவையும் உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சிறையில் அடைப்பு
அப்போது நீதிபதி, 2 பேரையும் சிறையில் அடைத்து நீதிமன்ற காவலில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதாவது 28-ந்தேதி(நேற்று) முதல் 30-ந்தேதி(நாளை) வரை 3 நாட்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 2 பேரும் உப்பள்ளி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் உப்பள்ளி கலவரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நாசீர் ஒண்ணாலா, ஆரிப் நாகராலா ஆகிய 2 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தவும் கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.