அனைத்து பஸ்களும் சென்று வர நடவடிக்கை

கிணத்துக்கடவு பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் போலீசாருக்கு, பயணிகள் பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர்.;

Update: 2022-04-28 16:21 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் போலீசாருக்கு, பயணிகள் பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை அருகே பஸ் நிலையம் இருக்கிறது. இங்கு மதுரை, தேனி, பழனி, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து கோவைக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்லும். 

ஆனால் சமீப காலமாக பஸ் நிலைத்துக்குள் வந்து செல்லவில்லை. மாறாக பஸ் நிலையத்துக்கு வெளியே வைத்து பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றன. இதனால் பஸ் நிலையம் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

இரும்பு தடுப்புகள்

இது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, அங்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து இரும்பு தடுப்புகளை வைத்து அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவு பஸ் நிலையத்திற்குள் சென்று வர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் கூறியதாவது:-
கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க அனைத்து பஸ்களும்,  உள்ளே சென்று வர அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

அதன்படி தற்போது அனைத்து பஸ்களும், அங்குள்ள நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றன. ஒரு சில பஸ்கள், அங்குள்ள நிலையத்திற்கு செல்லாமல் வெளியே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதாக புகார் வந்து உள்ளது. அந்த பஸ்களின் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்