பொன்னையாற்று பழைய பாலத்தில் ஒரு மாதம் போக்குவரத்துக்கு தடை
திருவலம் பொன்னையாற்று பழைய பாலத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் ஒரு மாத காலத்திற்கு பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருவலம்
திருவலம் பொன்னையாற்று பழைய பாலத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் ஒரு மாத காலத்திற்கு பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இரும்பு பாலம்
வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சியில், பொன்னையாற்றின் குறுக்கே 1939-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது பிரமாண்ட இரும்பு பாலம் கட்டப்பட்டது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களை இணைக்கும் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பொன்னையாற்றை கடப்பதற்காக ஜே.எச். தாராப்பூர் என்ஜினீயரிங் நிறுவனத்தால் இந்தப் பாலம் கட்டப்பட்டது. 11 தூண்களை கொண்டு துருப்பிடிக்காத இரும்புத்தளவாடங்களை பயன்படுத்தி இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் பாரத்தை, இரும்புத் தூண்கள் தாங்கும் வகையில், சாய்வு வடிவ இரும்புத் துண்டுகளைக் கொண்டு, அப்போதைய நவீன தொழில் நுட்பத்துடன் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழரின் கட்டிட கலைக்கு இந்த பாலம் ஒரு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.
வலிமை
தெற்கு ஆசியாவையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செய்த தலைசிறந்த சோழ மன்னரான ராஜேந்திர சோழனின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும், இந்த அரசனின் வலிமையை போல் இந்த பாலமும் வலிமையாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பாலத்திற்கு ராஜேந்திரா பாலம் என்று பெயர் வைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பாலத்தை 1939-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி தலைவர் ராஜாஜி திறந்து வைத்துள்ளார்.
சென்னை மாநிலத்திலேயே புதுமையான பாலமாக இந்தப் பாலம் திகழ்ந்து வந்துள்ளதால், இந்த பாலத்தில் ஆட்டுக்கார அலமேலு உள்ளிட்ட பல சினிமாக்கள் படமாக்கப்பட்டுள்ளன.
தூண்கள் சேதம்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் மணல் கொள்ளை உள்ளிட்டவைகளால், உறுதித்தன்மைக்கு குந்தகம் ஏற்படு்ம் நிலை உருவானது. இதனால் இப் பாலத்தின் மீது உள்ள தூண்களின் இணைப்பு பகுதிகள் சேதமடைந்தன.
இந்த சேதத்தை சரி செய்யும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் இந்தப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவடைய சுமார் ஒரு மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் பாலத்தின் இரு பக்கத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.
புதிய பாலம்
இந்தப் பாதையை பயன்படுத்தி வந்த அனைத்து வாகனங்களும், அருகே உள்ள புதிய பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
வரலாற்று சின்னமாக, கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும், ராஜேந்திரா பாலம் என்று அழைக்கப்படும் பழைய இரும்பு பாலம் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.