பள்ளி மாணவனை தாக்கிய அரசு பஸ் டிரைவர்
சாணார்பட்டி அருகே படிக்கட்டில் தொங்கிய மாணவனை அரசு பஸ் டிரைவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபால்பட்டி:
படிக்கட்டில் பயணம்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று அரசு டவுன் பஸ் சென்றது. காலை 8 மணி அளவில், சாணார்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு அந்த பஸ் வந்தது.
அப்போது பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்சில் ஏறினர். சிறிதுநேரத்தில் அங்கிருந்து பஸ் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏறிய மாணவர்கள் சிலர், உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததாக தெரிகிறது.
இதனைக்கண்ட டிரைவர், மாணவர்களை பஸ்சுக்குள் வருமாறு கூறினார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலேயே தொங்கி கொண்டிருந்தனர். மேலும் டிரைவரை மாணவர்கள் சிலர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மாணவர் மீது தாக்குதல்
இதனையடுத்து பஸ்சை நிறுத்திய டிரைவர், அதில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அங்கு கிடந்த குச்சியை எடுத்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சாணார்பட்டியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், பஸ்சை விட்டு கீழே இறங்கி அருகே உள்ள சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் மாணவரை தாக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என்று மாணவர்களையும், இதுபோன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று டிரைவரையும் போலீசார் அறிவுறுத்தினர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம், சாணார்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.