‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-28 16:04 GMT
‘தினத்தந்தி’க்கு நன்றி

பழனி தாலுகா மேல்கரைப்பட்டி கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் நியமிக்கப்படவில்லை என்று மேல்கரைப்பட்டியை சேர்ந்த குமரவேல் ‘தினத்தந்தி’ புகார்பெட்டி வாட்ஸ்-அப் எண்ணில் கடந்த 15-ந்தேதி புகார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியிலும் செய்தி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேல்கரைப்பட்டி கால்நடை மருத்துவமனையில் டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கு குமரவேல் நன்றி தெரிவித்துள்ளார்.

சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள் 

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அணைப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், முள்ளிப்பாடி.

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

பழனி பாரதிநகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிவண்ணன், பழனி.

வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு, ஆலப்பட்டி, ஊரல்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் கார், ஜீப், மினிலாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பல மணி நேரம் இந்த வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், பெரும்பாறை.

மேலும் செய்திகள்