திருப்பூரை போல் பெங்களூருவில் பின்னலாடை தொழிலை மேம்படுத்த நடவடிக்கை்; பசவராஜ் பொம்மை பேச்சு
திருப்பூரை போல் பெங்களூருவில் பின்னலாடை தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுயமரியாதை வாழ்க்கை
ஹாவேரி மாவட்டத்தில் உள்ள முதல்-மந்திரியின் சொந்த தொகுதியான சிக்காவியில் பின்னலாடை தொழில் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் அனைவருக்கும் வேலை கிடைத்து தன்னிறைவு-சுயமரியாதை வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அரசின் விருப்பம். சிக்காவியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கு முதல்கட்டமாக ரூ.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் பின்னலாடை தொழில் சிறப்பான முறையில் இருப்பது போல் பெங்களூருவில் பின்னலாடை தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய பின்னலாடை உற்பத்தி தொழில் நிறுவனம் தொடங்கப்படுகிறது.
கல்வி உதவி திட்டம்
ஹாவேரியில் 1,000 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. மும்பை- சென்னை தொழில் வழித்தடத்தில் பெலகாவி, ஹாவேரி, தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு வரை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் வேலை வாய்ப்பு புரட்சி ஏற்படும்.
கல்வி-அறிவாற்றல் இருப்பவர்கள் மட்டுமே உலகை ஆள முடியும். விவசாயிகளின் குழந்தைகளுக்காக கல்வி உதவித்திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.