நடிகை சுமலதா எம்.பி. பா.ஜனதாவில் இணைகிறாரா?

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகை சுமலதா எம்.பி. பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-28 15:13 GMT
பெங்களூரு:

பா.ஜனதாவில் சேருகிறேன்

  கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கட்சியை பலப்படுத்தும் பணியில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பழைய மைசூரு பகுதியில் பா.ஜனதா பலவீனமாக உள்ளது. அதனால் அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை இழுக்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

  நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா எம்.பி.யை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து தனது ஆதரவாளர்களிடன் கருத்து கேட்பு கூட்டத்தை அவர் மத்தூரில் நடத்தினார். இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சுமலதா, "நான் பா.ஜனதாவில் சேருகிறேன் என்று எங்கும் கூறவில்லையே. எனது ஆதரவாளர்களிடம் கருத்துகளை கேட்கிறேன். அதன் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்றார்.

உரிய முக்கியத்துவம்

  தான் பா.ஜனதாவில் சேர்ந்தால் தனது மகனுக்கு மண்டியா தொகுதியில் சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும் என்றும், தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா தலைவர்களிடம் சுமலதா எம்.பி. கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவேகவுடா, எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் அக்கட்சியில் நீடிப்பது இல்லை என்று ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார். ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டங்களில் அவர் கலந்து கொள்வது இல்லை.

  அதனால் அவரையும் இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக அவருடன் பா.ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜி.டி.தேவேகவுடா, தனக்கு சாமுண்டீஸ்வரி தொகுதியிலும், தனது மகனுக்கு உன்சூர் தொகுதியிலும் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பா.ஜனதா தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.டி.தேவேகவுடா

  ஜி.டி.தேவேகவுடா காங்கிரசில் சேர திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது மகனுக்கு உன்சூர் தொகுதியில் டிக்கெட் வழங்க முடியாது என்று காங்கிரஸ் தலைவா்கள் கூறிவிட்டதாகவும்,. அதனால் அவர் காங்கிரசில் சேரும் முடிவை கைவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்ட ஜி.டி.தேவேகவுடா சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடித்தக்கது.

மேலும் செய்திகள்