பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கு- சரத்பவார் நேரில் ஆஜராக சம்மன்
பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் அனுப்பியது.
மும்பை,
பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் அனுப்பியது.
வன்முறை
புனே மாவட்டத்தில் உள்ள பீமா- கோரேகாவ் போர் நினைவு சின்னத்தில் 200-வது ஆண்டு வெற்றி விழா கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவத்திற்கு முந்தைய நாளில் எல்கர் பரிஷத் மாநாட்டில் நடைபெற்ற ஆத்திரமூட்டும் பேச்சுகளே காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். மேலும் எல்கர் பரிஷத் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சமூக சேவர்கள் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
கால அவகாசம்
இந்த வழக்கை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.என். படேல் மற்றும் மராட்டிய முன்னாள் தலைமை செயலாளர் சுமித் மல்லிக் ஆகிய இரு நபர் குழு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணை குழு கடந்த 2018-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வன்முறை குறித்து ஊடகங்கள் கூறிய சில தகவல்களை கருத்தில் கொண்டு அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த 2020-ம் ஆண்டு சம்மன் அனுப்பினர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை.
பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி 23 மற்றும் 24-ந் தேதி கமிஷன் முன் ஆஜராகுமாறு பவாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் சரத்பவார் தரப்பில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்வரை கால அவகாசம் கோரப்பட்டது.
மீண்டும் சம்மன்
இந்த நிலையில் விசாரணை குழு இன்று மீண்டும் சரத்பவாருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. அதில் வருகிற 5 மற்றும் 6-ந் தேதி விசாரணை ஆணையத்தின் ஆஜராகுமாறு தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவரை விசாரணை குழு கூறியுள்ளது.