தெருவிளக்குகள் எரியாததற்கு எதிர்ப்பு: வீடுகளில் தீப்பந்தங்கள் கட்டி பொதுமக்கள் போராட்டம்
தெருவிளக்குகள் எரியாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் தீப்பந்தங்கள் கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
குன்னூர்
குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம் எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு 160 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் தேயிலை தோட்டங்களிலிருந்து காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் வெளியேறி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிகின்றன.இந்த நிலையில் பழத்தோட்டம் எம்.ஜி.ஆர்.நகரில் கடந்த 8 மாதங்களாக தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் இருளாக இருப்பதால் வனவிலங்குகள் வருவது பொது மக்களுக்கு தெரிவது இல்லை. இதனால் அவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து பல முறை உபதலை ஊராட்சியில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் தெருவிளக்குகள் எரியாததற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு பொது மக்கள் தெருவிளக்கிற்கு பதிலாக வெளிச்சம் தர வீடுகளுக்கு முன் தீப்பந்தங்களை ஏற்றியும், கைகளில் ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒளிராத தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.