குன்னூரில் குடியிருப்புகளை மறு அளவீடு செய்ய வேண்டும்
குன்னூரில் குடியிருப்புகளை மறு அளவீடு செய்ய ேவண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குன்னூர்
குன்னூர் அருகே மலையப்பன் காட்டேஜ் குடியிருப்பு பகுதி உள்ளது. இதன் அருகில் சுமார் 26 குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஓடை புறம்போக்கில் வீடு கட்டியிருப்பதாகவும், அதனை காலி செய்ய வேண்டும் என்றும் கடந்த 21-ந் தேதி வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும் , கலக்கமும் அடைந்துள்ளனர். எனவே நிலத்தை மறுஅளவீடு செய்து அங்கேயே வாழ வழி வகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் குன்னூர் உதவி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மலையப்பன் காட்டேஜ் அருகில் உள்ள நிலத்தில் நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். அரசிற்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, மின் கட்டணம் ஆகியவற்றை உரிய நேரத்தில் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் வீடுகளை காலி செய்ய வருவாய் துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதனால் இந்த இடத்தை காலி செய்து விட்டு எங்கு செல்வது என்று திகைத்து நிற்கிறோம். எங்கள் வீடுகளுக்கும் ஓடைக்கும் நீண்ட தொலைவுள்ளது. எனவே நிலத்தை மறு அள வீடு செய்து நாங்கள் அங்கேயே குடியிருக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.